திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சற்குருமணி மாலை
saṟkurumaṇi mālai
பேறடைவு
pēṟaṭaivu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

099. தத்துவ வெற்றி
tattuva veṟṟi

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
    செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
    உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
    ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
    பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
    பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
    இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
    ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
  • 2. மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
    மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
    இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
    இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
    தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
    சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
    நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
    ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
  • 3. பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
    பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
    கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
    குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
    என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
    இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
    பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
    பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
  • 4. விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
    விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
    புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
    புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
    தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
    சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
    பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
    பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
  • 5. பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
    பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
    சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
    தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
    ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
    அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
    பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
    பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
  • 6. மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
    வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
    உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
    உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
    வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
    மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
    இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
    எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
  • 7. கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
    கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
    நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
    நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
    அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
    அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
    அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
    ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
  • 8. அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
    அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
    செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
    திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
    இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
    இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
    சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
    சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
  • 9. மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
    வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
    ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
    ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
    கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
    கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
    ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
    இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
  • 10. மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
    மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
    சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
    தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
    பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
    பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
    ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
    அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
  • 11. மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
    வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
    போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
    போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
    சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
    சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
    ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
    அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
  • 12. கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
    கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
    நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
    நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
    என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
    இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
    இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
    எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
  • 13. எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
    இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
    இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
    இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
    பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
    பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
    சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
    சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
  • 14. பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
    பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
    ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
    உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
    அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
    அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
    தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
    சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
  • 15. பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
    பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
    வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
    வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
    ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
    திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
    மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
    வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
  • 16. தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
    துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
    தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
    தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
    ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
    இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
    போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
    பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
  • 17. பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
    பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
    தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
    தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
    செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
    தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
    அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
    அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
  • 18. கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
    கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
    தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
    தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
    தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
    சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
    சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
    தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
  • 19. பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
    படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
    வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
    வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
    நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
    நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
    கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
    கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
  • 20. மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
    வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
    பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
    பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
    இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
    என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
    அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
    அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.

    • 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
    • 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.

தத்துவ வெற்றி // தத்துவ வெற்றி

No audios found!