திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அடிமைப் பேறு
aṭimaip pēṟu
திருவருட்பேறு
tiruvaruṭpēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

084. உத்திரஞானசிதம்பர மாலை
uttirañāṉasitampara mālai

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
    மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
    பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
    தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
  • 2. இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
    துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
    அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
    திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
  • 3. உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
    இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
    கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
    திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
  • 4. பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
    தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
    உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
    சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
  • 5. ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
    மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
    வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
    செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
  • 6. எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
    சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
    தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
    செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
  • 7. குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
    பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
    கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
    திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
  • 8. கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
    சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
    கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
    செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
  • 9. காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
    வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
    கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
    சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
  • 10. சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
    கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமமிலார்
    நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
    செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
  • 11. ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
    மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
    மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
    தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.

உத்திரஞானசிதம்பர மாலை // உத்திரஞானசிதம்பர மாலை

No audios found!