திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உத்திரஞானசிதம்பர மாலை
uttirañāṉasitampara mālai
நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)
neñsōṭu nērtal (tillaiyum pārvatipuramum)
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

085. திருவருட்பேறு
tiruvaruṭpēṟu

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
    பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
    வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
    எந்தாய்நின் உள்ளமறி யேன்.
  • 2. பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
    நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
    தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
    பாக்கியவான் ஆனேன் பதிந்து.
  • 3. என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
    முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
    படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
    எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
  • 4. சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
    தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
    எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
    எடுத்தாய் தயவைவிய வேன்.
  • 5. உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
    தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
    தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
    ஆக்கமுற வைத்தாய் அது.
  • 6. நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
    ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
    மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
    காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
  • 7. புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
    பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
    தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
    ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
  • 8. அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
    பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
    வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
    தந்தாய்என் நான்செய் தவம்.
  • 9. நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
    தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
    ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
    அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
  • 10. வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
    வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
    வாழி அருட்சோதி வாழிநட ராயன்
    வாழி சிவஞான வழி.

திருவருட்பேறு // திருவருட்பேறு

No audios found!