Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
தனித் திருமாலை
taṉit tirumālai
எண்ணப் பத்து
eṇṇap pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
005. பிரார்த்தனை மாலை
pirārttaṉai mālai
திருத்தணிகைப் பதிகங்கள்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
1.
சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
2.
கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
3.
மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
4.
அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.
5.
மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.
6.
நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.
7.
அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே
சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே
குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன்
எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே.
8.
கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
9.
சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
10.
போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
11.
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
12.
குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
13.
உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
14.
வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.
15.
கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.
16.
செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
17.
கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
18.
நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
19.
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
20.
தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
21.
அடியேன் எனச்சொல்வ தல்லாமல் தாள்அடைந் தாரைக்கண்டே
துடியேன் அருண கிரிபாடும் நின்அருள் தோய்புகழைப்
படியேன் பதைத்துரு கேன்பணி யேன்மனப் பந்தம்எலாம்
கடியேன் தணிகையைக் காணேன்என் செய்வேன்எம் காதலனே.
22.
தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
23.
என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.
24.
சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
25.
மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
26.
தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
27.
அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
கடையான நாய்க்குள் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே
உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.
28.
பண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்
கண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே
விண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்
புண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.
29.
பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
30.
சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.
பிரார்த்தனை மாலை // பிரார்த்தனை மாலை
[5-5, 0042]SDSG15--SiirkoNta Theyva.mp3
Download
5-005-0042-Piraarththanai_Maalai.mp3
Download