Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
சிறு விண்ணப்பம்
siṟu viṇṇappam
திருக்காட்சிக் கிரங்கல்
tirukkāṭsik kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
060. பெரு விண்ணப்பம்
peru viṇṇappam
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
2.
உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே.
3.
எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
4.
காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
5.
எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
6.
பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
7.
கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.
8.
பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே.
9.
இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான்
என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம்
பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே.
10.
வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.
பெரு விண்ணப்பம் // பெரு விண்ணப்பம்
No audios found!
Oct,12/2014: please check back again.