திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிகாமணி மாலை
sikāmaṇi mālai
எதிர்கொள் பத்து
etirkoḷ pattu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

032. கலி முறையீடு
kali muṟaiyīṭu

    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
    கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
    பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
    பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
  • 2. பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
    வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
    மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
    சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
  • 3. செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
    புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
    கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
    மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.
  • 4. வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
    உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
    கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
    எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.
  • 5. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
    பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
    வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
    உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
  • வேறு
  • 6. இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
    தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
    வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
    தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
  • வேறு
  • 7. இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
    நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
    கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
    ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
  • 8. உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
    எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
    அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
    வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
  • 9. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
    சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
    மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
    கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.
  • 10. மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
    உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
    கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
    பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
  • 11. என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
    பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
    தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
    நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
  • 12. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
    திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
    அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
    புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.

கலி முறையீடு // கலி முறையீடு

No audios found!