திருமுறைகள்

செவ்வாய்க்கிழமை விரத முறை

3. செவ்வாய்க்கிழமை விரத முறை

திருச்சிற்றம்பலம்

திங்கட்கிழமை இரவில் பலாகாரஞ்* செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ்செய்து, விபூதியைச் சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை செபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஓம் சிவ சூரியாய நம வென்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து, அதன் பின்பு அவ்விடத்திலேதானே நின்றுகொண்டு,

தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக்கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக்கொண்டு, பின்பு ஓம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஓரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுதுபடைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவதரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை** முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும்; சிவசரித்திரங் கேட்க வேண்டும்; செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும்; சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம், சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்கவேண்டும்.

திருச்சிற்றம்பலம்
______________________________________________________________________________________________* பலாகாரம் - பழ ஆகாரம், பழ உணவு.
** கொட்டை - தலையணை.
 

No audios found!