Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
நெஞ்சுறுத்த திருநேரிசை
neñsuṟutta tirunērisai
கலி முறையீடு
kali muṟaiyīṭu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
031. சிகாமணி மாலை
sikāmaṇi mālai
புள்ளிருக்குவேளூர்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
1.
வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
2.
பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்
மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்
பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ
செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
3.
கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப்
பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும்
இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும்
செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
4.
ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
5.
நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்
தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே
கோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்
தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
6.
மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
7.
தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
8.
ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
9.
புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
10.
ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
11.
அறத்தாயை ஓர்புடை கொண்டோர் புடைமண் அளந்தமுகில்
நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
12.
அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
13.
ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
14.
களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
15.
மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
சிகாமணி மாலை // சிகாமணி மாலை
2403-007-3-Sigamani_Maalai.mp3
Download