திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கருணை விண்ணப்பம்
karuṇai viṇṇappam
உள்ளப் பதிகம்
uḷḷap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

085. அடிமைப் பதிகம்
aṭimaip patikam

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
    அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
    வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
    வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
    நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
    நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
    கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
    கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
  • 2. கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
    கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
    ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
    எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
    சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
    சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
    நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
    நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்.
  • 3. வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
    வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
    தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
    சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
    ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
    அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
    ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
    தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
  • 4. என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
    என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
    தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
    தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
    உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
    உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
    முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
    முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
  • 5. என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
    இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
    நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
    நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
    மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
    மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
    உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
    உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
  • 6. உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
    உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
    கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
    கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
    எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
    எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
    வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
    மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
  • 7. வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
    மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
    தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
    தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
    மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
    மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
    பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
    பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
  • 8. இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
    எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
    மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
    வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
    துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
    சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
    விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
    வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
  • 9. விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
    வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
    அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
    ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
    கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
    கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
    நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
    நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே.
  • 10. நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
    நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
    இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
    எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
    கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
    கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
    அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
    அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.

அடிமைப் பதிகம் // அடிமைப் பதிகம்

No audios found!