Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவடி முறையீடு
tiruvaṭi muṟaiyīṭu
அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
attuvita āṉanta aṉupava iṭaiyīṭu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
016. தற் சுதந்தரம் இன்மை
taṟ sutantaram iṉmai
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
2.
என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
3.
பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
4.
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
5.
உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய்
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
6.
சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
7.
இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
8.
கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
9.
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
10.
இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
தற் சுதந்தரம் இன்மை // தற் சுதந்தரம் இன்மை
[6-16, 3366]SDSG04--Ippaaril Utalaavi.mp3
Download