திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital
திருவடி முறையீடு
tiruvaṭi muṟaiyīṭu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

014. சிற்சபை விளக்கம்
siṟsapai viḷakkam

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
    சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
    வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
    மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
    மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 2. எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
    இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
    வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
    அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
    தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 3. சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
    துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
    வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
    உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
    தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 4. ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
    அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
    வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
    நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
    தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 5. கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
    காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
    வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
    ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
    தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
  • 6. கரண வாதனை யால்மிக மயங்கிக்
    கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
    மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
    இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
    சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 7. தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
    சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
    மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
    எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
    தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 8. சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
    சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
    வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
    கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
    தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 9. பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
    பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
    மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
    வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
    எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
    ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
    சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
  • 10. கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
    கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
    மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
    உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
    உயிர் தரித்திடா துன்அடி ஆணை
    தயவு செய்தருள் வாய்வடல் அரசே
    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

    • 250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
    • 251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.

சிற்சபை விளக்கம் // சிற்சபை விளக்கம்

No audios found!