திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆண்டருளிய அருமையை வியத்தல்
āṇṭaruḷiya arumaiyai viyattal
திருநடப் புகழ்ச்சி
tirunaṭap pukaḻchsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

049. இறைவனை ஏத்தும் இன்பம்
iṟaivaṉai ēttum iṉpam

  எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. கருணைமா நிதியே என்னிரு கண்ணே
  கடவுளே கடவுளே என்கோ
  தருணவான் அமுதே என்பெருந் தாயே
  தந்தையே தந்தையே என்கோ
  தெருள்நிறை மதியே என்குரு பதியே
  தெய்வமே தெய்வமே என்கோ
  அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
  ஆண்டவ நின்றனை அறிந்தே.
 • 2. ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
  ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
  வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
  விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
  பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
  பெரியவர் வைத்ததோர் தங்கக்
  கட்டியே என்கோ அம்பலத் தாடும்
  கருணையங் கடவுள்நின் றனையே.
 • 3. துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
  சோதியுட் சோதியே என்கோ
  அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
  அம்மையே அப்பனே என்கோ
  இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
  என்உயிர்க் கின்னமு தென்கோ
  என்பொலா மணியே என்கணே என்கோ
  என்னுயிர் நாதநின் றனையே.
 • 4. கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
  கணவனே கணவனே என்கோ
  ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
  ஒருதனிப் பெரியனே என்கோ
  திருத்தனே எனது செல்வமே எல்லாம்
  செயவல்ல சித்தனே என்கோ
  நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
  நிறைஅருட் சோதிநின் றனையே.
 • 5. தாயனே எனது தாதையே ஒருமைத்
  தலைவனே தலைவனே என்கோ
  பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
  பெருந்தகைப் பெரும்பதி என்கோ
  சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
  சித்தெலாம் வல்லசித் தென்கோ
  தூயனே எனது நேயனே என்கோ
  சோதியுட் சோதிநின் றனையே.
 • 6. அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
  ஆனந்தத் தனிமலர் என்கோ
  கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
  கடையனேன் உடையநெஞ் சகமாம்
  இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
  இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
  துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
  சோதியுட் சோதிநின் றனையே.
 • 7. தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
  சர்க்கரை அமுதமே என்கோ
  மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
  முகநகைக் கணவனே என்கோ
  போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
  புணர்ந்தஓர் பூவையே என்கோ
  ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
  அம்பலத் தாடிநின் றனையே.
 • 8. தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
  தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
  சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
  தனில்உறும் அனுபவம் என்கோ
  ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
  ஓங்கிய ஒருமையே என்கோ
  சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
  திருச்சிற்றம் பலத்தவ நினையே.
 • 9. யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
  ஓங்கிய காட்சியே என்கோ
  ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
  இசைந்தபே ரின்பமே என்கோ
  சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
  சார்ந்தசற் குருமணி என்கோ
  மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
  மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
 • 10. இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
  இயற்கையுள் இயற்கையே என்கோ
  வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
  வயங்கிய வான்பொருள் என்கோ
  திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
  செய்ததோர் சித்தனே என்கோ
  கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
  களித்தளித் தருளிய நினையே.

  • 276. கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
  • 277. நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.

இறைவனை ஏத்தும் இன்பம் // இறைவனை ஏத்தும் இன்பம்

No audios found!