திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறைவனை ஏத்தும் இன்பம்
iṟaivaṉai ēttum iṉpam
பெறாப் பேறு
peṟāp pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

050. திருநடப் புகழ்ச்சி
tirunaṭap pukaḻchsi

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
    பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
    நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
    நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
    கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
    கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
    துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 2. ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
    அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
    காரணமே காரியமே காரணகா ரியங்கள்
    கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
    பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
    புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
    தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 3. இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
    ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
    அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
    அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
    புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
    பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
    துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 4. எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
    இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
    ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
    உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
    வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
    மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
    சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 5. அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
    அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
    முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
    முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
    சகவடிவில் தானாகி நானாகி நானும்
    தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
    சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 6. உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
    உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
    படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
    பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
    அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
    அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
    தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 7. ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
    அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
    போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
    பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
    ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
    இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
    தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 8. படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
    பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
    தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
    சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
    மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
    வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
    துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 9. பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
    படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
    அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
    அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
    தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
    தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
    துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
  • 10. தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
    தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
    வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
    விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
    வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
    வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
    தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
    சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

    • 328. தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

திருநடப் புகழ்ச்சி // திருநடப் புகழ்ச்சி