திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆடேடி பந்து
āṭēṭi pantu
சிவசிவ ஜோதி
sivasiva jōti
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

117. ஞான மருந்து
ñāṉa maruntu

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. ஞான மருந்திம் மருந்து - சுகம்
  நல்கிய சிற்சபா நாத மருந்து.
 • கண்ணிகள்
 • 2. அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
  ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
  பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
  புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான
 • 3. எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
  என்றும் விடாமல் இனிக்கு மருந்து
  சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
  ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. ஞான
 • 4. காணாது காட்டு மருந்து - என்றன்
  கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
  ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
  வாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான
 • 5. சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
  சோதி மலையில் துலங்கு மருந்து
  சித்துரு வான மருந்து - என்னைச்
  சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான
 • 6. அன்பர்க் கெளிய மருந்து - மற்றை
  ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து
  என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை
  இன்ப நிலையில் இருத்து மருந்து. ஞான
 • 7. நாதாந்த நாட்டு மருந்து - பர
  ஞான வெளியில் நடிக்கு மருந்து
  போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
  பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. ஞான
 • 8. ஆதி அனாதி மருந்து - திரு
  அம்பலத் தேநட மாடு மருந்து
  ஜோதி மயமா மருந்து - என்னைச்
  சோதியா தாண்ட துரிய மருந்து. ஞான
 • 9. ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
  கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
  ஊறந்த மில்லா மருந்து - எனக்
  குள்ளே கலந்த உறவா மருந்து. ஞான
 • 10. என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
  தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
  என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
  என்னுயி ராகிய இன்ப மருந்து. ஞான
 • 11. என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
  என்னறி வாகி இலங்கு மருந்து
  என்னறி வின்ப மருந்து - என்னுள்
  என்னறி வுக்கறி வென்னு மருந்து. ஞான
 • 12. என்குரு வான மருந்து - என்றும்
  என்தெய்வ மாகி இருக்கு மருந்து
  என்அன்னை யென்னு மருந்து - என்றும்
  என்தந்தை யாகிய இன்ப மருந்து. ஞான
 • 13. என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
  என்செல்வ மாகி இருக்கு மருந்து
  என்னுயிர் நட்பா மருந்து - எனக்
  கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. ஞான
 • 14. என்னிறை யான மருந்து - மகிழ்ந்
  தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
  தன்னறி வாகு மருந்து - என்னைத்
  தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. ஞான
 • 15. உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
  உயிருக் கனாதி உறவா மருந்து
  தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
  சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான
 • 16. மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
  வேதா கமத்தும் விளங்கு மருந்து
  கைப்பொரு ளான மருந்து - மூன்று
  கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. ஞான
 • 17. மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
  மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
  கதிதரும் இன்ப மருந்து - அருட்
  கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து. ஞான
 • 18. கற்பூர ஜோதி மருந்து - பசுங்
  கற்பூர நன்மணங் காட்டு மருந்து
  பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
  போதம் தவிர்த்தசிற் போத மருந்து. ஞான
 • 19. மேலை வெளியா மருந்து - நான்
  வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
  சாலை விளக்கு மருந்து - சுத்த
  சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
 • 20. என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே
  இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து
  துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்
  சோதியால் என்னைத் துலக்கு மருந்து. ஞான
 • 21. பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்
  புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
  கையிற் கிடைத்த மருந்து - சிவ
  காமக் கொடியைக் கலந்த மருந்து. ஞான
 • 22. ஆணவம் தீர்க்கு மருந்து - பர
  மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
  மாணவ வண்ண மருந்து - என்னை
  வலிய அழைத்து வளர்க்கு மருந்து. ஞான
 • 23. வானடு வான மருந்து - என்னை
  மாமணி மேடைமேல் வைத்த மருந்து
  ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
  துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
 • 24. மலையிலக் கான மருந்து - என்றன்
  மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
  கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
  கண்ணாகிக் காணும் கனத்த மருந்து. ஞான
 • 25. அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
  ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
  தற்பதம் தந்த மருந்து - எங்கும்
  தானேதா னாகித் தனித்த மருந்து. ஞான
 • 26. தன்னை அளித்த மருந்து - என்றும்
  சாகாத நல்வரம் தந்த மருந்து
  பொன்னடி ஈந்த மருந்து - அருட்
  போனகம் தந்த புனித மருந்து. ஞான
 • 27. கண்ணுக் கினிய மருந்து - என்றன்
  கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து
  எண்ணுக் கடங்கா மருந்து - என்னை
  ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து. ஞான
 • 28. சுட்டப் படாத மருந்து - என்றன்
  தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
  எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
  எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து. ஞான
 • 29. உன்னற் கரிதா மருந்து - எனக்
  குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
  தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
  சாக்கிரா தீதச் சபேச மருந்து. ஞான
 • 30. ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த
  ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
  அன்றிமூன் றான மருந்து - நான்
  காகிஐந் தாகி அமர்ந்த மருந்து. ஞான
 • 31. வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
  வெளியும் கடந்து விளங்கு மருந்து
  ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
  ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான
 • 32. ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
  கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
  ஈறாதி இல்லா மருந்து - என்னை
  எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. ஞான
 • 33. ஆரணத் தோங்கு மருந்து - அருள்
  ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
  காரணம் காட்டு மருந்து - எல்லாம்
  கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. ஞான
 • 34. மலமைந்து நீக்கு மருந்து - புவி
  வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
  நலமிக் கருளு மருந்து - தானே
  நானாகித் தானாளு நாட்டு மருந்து. ஞான
 • 35. ஞான மருந்திம் மருந்து - சுகம்
  நல்கிய சிற்சபா நாத மருந்து.

ஞான மருந்து // ஞான மருந்து