திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஞான மருந்து
ñāṉa maruntu
ஜோதியுள் ஜோதி
jōtiyuḷ jōti
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

118. சிவசிவ ஜோதி
sivasiva jōti

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
  சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
  சிவசிவ சிவசிவ ஜோதி.
 • கண்ணிகள்
 • 2. சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
  சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
  தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
  தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. சிவசிவ
 • 3. சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
  செய்திட வல்ல சிதம்பர ஜோதி
  அத்துவி தானந்த ஜோதி - என்னை
  ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. சிவசிவ
 • 4. சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
  செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
  தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
  தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
 • 5. ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
  ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
  ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
  உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
 • 6. மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
  வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
  துன்னிய வச்சிர ஜோதி - முத்து
  ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. சிவசிவ
 • 7. பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
  பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
  ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
  குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
 • 8. ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
  தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
  பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
  பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
 • 9. மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
  வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
  இனமான உள்ளக ஜோதி - சற்றும்
  ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. சிவசிவ
 • 10. முக்குணமு மூன்றாம் ஜோதி - அவை
  முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
  எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
  எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. சிவசிவ
 • 11. பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
  பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
  விகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
  விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. சிவசிவ
 • 12. கால முதற்காட்டும் ஜோதி - கால
  காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
  கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
  குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. சிவசிவ
 • 13. தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
  தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
  அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
  அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. சிவசிவ
 • 14. சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
  சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
  முத்தர் அனுபவ ஜோதி - பர
  முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. சிவசிவ
 • 15. ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
  கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
  வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
  வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
 • 16. பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
  பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
  வாரமுற் றோங்கிய ஜோதி - மன
  வாக்குக் கெட்டாததோர் மாமணி316 ஜோதி. சிவசிவ
 • 17. ஒன்றான பூரண ஜோதி - அன்பில்
  ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி
  என்றா ஒளிர்கின்ற ஜோதி - என்னுள்
  என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி. சிவசிவ
 • 18. மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
  வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
  துய்ய சிவானந்த ஜோதி - குரு
  துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
 • 19. சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
  சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
  உவமையில் லாப்பெருஞ் சோதி - என
  துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
 • 20. என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
  இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
  அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
  ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. சிவசிவ
 • 21. சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
  செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
  புத்தமு தாகிய ஜோதி - சுக
  பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
 • 22. தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
  சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
  விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
  வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. சிவசிவ
 • 23. சுகமய மாகிய ஜோதி - எல்லா
  ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
  அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
  தானந்த ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
 • 24. நித்த பரானந்த ஜோதி - சுத்த
  நிரதிச யானந்த நித்திய ஜோதி
  அத்துவி தானந்த ஜோதி - எல்லா
  ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ
 • 25. பொய்யாத புண்ணிய ஜோதி - எல்லாப்
  பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி
  நையா தருள்செய்த ஜோதி - ஒரு
  நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஜோதி. சிவசிவ
 • 26. கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
  கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
  எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
  எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. சிவசிவ
 • 27. விந்து ஒளிநடு ஜோதி - பர
  விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
  நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர
  நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. சிவசிவ
 • 28. தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
  தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
  நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
  நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சிவசிவ
 • 29. தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
  சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
  என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
  ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி. சிவசிவ
 • 30. அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
  ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
  இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
  கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ
 • 31. காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
  காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
  ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
  நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ
 • 32. ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
  என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
  சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
  தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. சிவசிவ
 • 33. சுத்த சிவமய ஜோதி - என்னை
  ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
  சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
  தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
 • 34. சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
  சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
  சிவசிவ சிவசிவ ஜோதி.

  • 316. மாணிக்க - ச. மு. க. பதிப்பு.

சிவசிவ ஜோதி // சிவசிவ ஜோதி