1. கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
2. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
3. தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
4. கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
5. கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
6. ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.