Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அபயம் அபயம் அபயம்
apayam apayam apayam
ஆணிப்பொன்னம்பலக் காட்சி
āṇippoṉṉampalak kāṭsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
127. அற்புதம் அற்புதமே
aṟputam aṟputamē
சிந்து
திருச்சிற்றம்பலம்
பல்லவி
1.
அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே.
கண்ணிகள்
2.
சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
3.
செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
4.
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
5.
சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
6.
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
7.
புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
8.
வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
9.
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
10.
அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே.
அருள் அற்புதம் // அற்புதம் அற்புதமே
[6-127, 4905]JSS--ARputham ARputha.mp3
Download
[6-127, 4905]MSS--ARputham ARputha.mp3
Download