திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அடியார்பணி அருளவேண்டல்
aṭiyārpaṇi aruḷavēṇṭal
அன்பிற் பேதுறல்
aṉpiṟ pētuṟal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

037. நாள் அவம்படாமை வேண்டல்
nāḷ avampaṭāmai vēṇṭal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
    கோதையர் பால்விரைந் தோடிச்
    சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    என்தனி உயிரே என்னுடைப் பொருளே
    என்உளத் திணிதெழும் இன்பே
    மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
    வந்தமர்ந் தருள்செயும் மணியே.
  • 2. மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
    வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
    கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
    கழலடிக் காக்கும்நாள் உளதோ
    குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
    குறிகுணங் கடந்ததோர் நெறியே
    எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
    எந்தையே தணிகைஎம் இறையே.
  • 3. இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
    இலைநெடு வேற்கணார் அளகச்
    சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
    திருவடிக் காக்கும்நாள் உளதோ
    மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
    வள்ளலே உள்ளகப் பொருளே
    அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
    அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
  • 4. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
    அலர்முலை அணங்கனார் அல்குல்
    புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
    பாலனே வேலுடை யவனே
    விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
    வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
  • 5. விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
    விம்முறும் இளமுலை மடவார்
    களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
    கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
    அளக்கருங் கருணை வாரியே ஞான
    அமுதமே ஆனந்தப் பெருக்கே
    கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
    கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
  • 6. கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
    கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
    திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
    இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
    விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
    மெய்அடி யவர்உள விருப்பே
    திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
    தெய்வமே அருட்செழுந் தேனே.
  • 7. தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
    திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
    கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
    கழல்வழி நடத்தும்நாள் உளதோ
    மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
    வண்புனத் தடைந்திட்ட மணியே
    வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
    மாமலை அமர்ந்தருள் மருந்தே.
  • 8. மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
    வாணுதல் மங்கையர் இடத்தில்
    பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
    பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
    அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
    ஆனந்தத் தேறலே அமுதே
    இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
    இனிதமர்ந் தருளிய இன்பே.
  • 9. இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
    ஏந்திழை யவர்புழுக் குழியில்
    துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
    துணையடிக் காக்கும்நாள் உளதோ
    அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
    அரிஅயன் பணிபெரி யவனே
    வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
    மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
  • 10. வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
    வலித்திடும் மங்கையர் தம்பால்
    தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
    தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
    சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
    தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
    ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
    உதவுசீர் அருட்பெருங் குன்றே.

நாள் அவம்படாமை வேண்டல் // நாள் அவம்படாமை வேண்டல்