11. அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
12. மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
13. தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
52. கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
57. மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
58. கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
88. ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
147. தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
156. எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லா போகமும் என்போகம் ஆயின
எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.