திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அர்ப்பித் திரங்கல்
arppit tiraṅkal
புறமொழிக் கிரங்கல்
puṟamoḻik kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

068. அச்சத் திரங்கல்
achsat tiraṅkal

    கோயில்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
    சுயம்பிர காசமே அமுதில்
    கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
    கடவுளே கண்ணுதற் கரும்பே
    குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
    கொடுந்துய ரால்அலைந் தையா
    முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
    மூடன்என் றிகழ்வது முறையோ.
  • 2. இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
    ஏன்றுகொள் பவரிலை அந்தோ
    அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
    அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
    புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
    பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
    திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
    செல்வமே சிவபரம் பொருளே.
  • 3. பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
    புத்தமு தேகுணப் பொருப்பே
    இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
    இன்பமே என்பெருந் துணையே
    அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
    அண்ணலே நின்அடிக் கபயம்
    மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
    மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
  • 4. ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
    றணுத்துணைத் திவலையே எனினும்
    ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
    இல்லையேல் என்செய்கேன் எளியேன்
    நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
    நினைப்பரும் நிலைமையை அன்பர்
    வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
    விமலனே விடைப்பெரு மானே.
  • 5. பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
    பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
    அருமையில் பிரமன் ஆதிய தேவர்
    அடைந்தநற் செல்வமே அமுதே
    இருமையிற் பயனும் நின்திரு அருளே
    என்றுநின் அடைக்கலம் ஆனேன்
    கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
    களைகளைந் தெனைவிளைத் தருளே.
  • 6. விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
    விருப்பினை நெருப்புறழ் துன்பின்
    இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
    என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
    தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
    தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
    கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
    கிளர்தரும் சிற்பர சிவனே.
  • 7. சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
    தேவனே தில்லைஅம் பலத்தே
    தற்பர நடஞ்செய் தாணுவே அகில
    சராசர காரணப் பொருளே
    அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
    அலைதரு கின்றனன் எளியேன்
    கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
    களிப்புடன் ஆடுவ தென்றோ.
  • 8. என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
    என்றுநின் உருவுகண் டிடும்நாள்
    என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
    என்றென தகத்துயர் அறும்நாள்
    மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
    வானவர் கனவினும் தோன்றா
    தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
    உத்தம வித்தக மணியே.
  • 9. வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
    விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
    அத்தக வேனை எடுப்பவர் நின்னை
    அன்றிஎங் கணும்இலை ஐயா
    மத்தகக் கரியின் உரிபுனை பவள
    வண்ணனே விண்ணவர் அரசே
    புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
    பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
  • 10. அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
    அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
    மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
    வானமும் தேடினும் இன்றே
    இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
    இணைதுணை எனநினைந் துற்றேன்
    மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
    வாழிய அருட்பெருந் துறையே.

அச்சத் திரங்கல் // அச்சத் திரங்கல்