3. தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
சீறு பாம்புகண் டெனஒளித் தேக
சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
செய்ப வன்செய லும்அவை உடனே
செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
4. தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
தழுவி யேஅதை முழுவதும் கேட்க
சேய நன்னெறி அணித்தது செவிகாள்
சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
5. நல்ல நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.