திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சைத் தேற்றல்
neñsait tēṟṟal
நெடுமொழி வஞ்சி
neṭumoḻi vañsi
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

037. நெஞ்சறிவுறூஉ
neñsaṟivuṟūu

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
    இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
    மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
    வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
    உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
    உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
    இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 2. துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
    சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
    வன்ப தாகிய நீயும்என் னுடனே
    வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
    ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
    ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
    இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 3. ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
    ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
    வாட்டு கின்றனை வல்வினை மனனே
    வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
    கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
    குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
    ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 4. வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
    வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
    நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
    நானும் அங்கதை நயப்பது நன்றோ
    தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
    தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
    எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 5. உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
    உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
    வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
    வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
    தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
    சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
    எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 6. நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
    நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
    நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
    நன்று நின்செயல் நின்றிடு மனனே
    ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
    அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
    ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 7. கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
    கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
    மாறு மாயையால் மயங்கிய மனனே
    வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
    ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
    அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
    ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 8. யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
    அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
    போது போக்கினை யேஇனி மனனே
    போதி போதிநீ போம்வழி எல்லாம்
    கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
    குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
    ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 9. விச்சை வேண்டினை வினையுடை மனனே
    மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
    துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
    சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
    பிச்சை எம்பெரு மான்என நினையேல்
    பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
    இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
  • 10. தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
    சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
    ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
    ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
    நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
    நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
    ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
    இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

நெஞ்சறிவுறுத்தல் // நெஞ்சறிவுறூஉ

No audios found!