1. சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
நன்று வேண்டிய யாவையும் வாங்கி
நல்கு வேன்எனை நம்புதி மிகவே.
2. தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
மாது வேண்டிய நடனநா யகனார்
வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
4. கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
கருதி வேண்டிய தியாதது கேண்மோ
சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
5. இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.