திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபராதத் தாற்றாமை
aparātat tāṟṟāmai
திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
tirumullaivāyil tiruviṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

012. அருளியல் வினாவல்
aruḷiyal viṉāval

    திருமுல்லைவாயில்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேன்என இனிக்கும் திருவருட் கடலே
    தெள்ளிய அமுதமே சிவமே
    வான்என நிற்கும் தெய்வமே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
    உன்திருக் கோயில்வந் தடைந்தால்
    ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
    ஈதுநின் திருவருட் கியல்போ.
  • 2. பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
    புத்தமு தேமறைப் பொருளே
    வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    தீங்கொடி யாத வினையனேன் எனினும்
    செல்வநின் கோயில்வந் தடைந்தால்
    ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
    ஏன்எனா திருப்பதும் இயல்போ.
  • 3. துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
    சுந்தரா சுந்தரன் தூதா
    மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
    அறிவிலேன் எனினுநின் கோயிற்
    கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
    திருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 4. கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
    கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
    மங்கல்இல் லாத வண்மையே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
    தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
    எங்குவந் தாய்நீ யார்என வேனும்
    இயம்பிடா திருப்பதும் இயல்போ.
  • 5. நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
    நல்லவ னேதிருத் தில்லை
    மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
    தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
    என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
    திருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 6. பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
    பத்தர்கட் கருள்செயும் பரமே
    மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
    பெருமநின் அருள்பெற லாம்என்
    றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
    இருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 7. முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
    முக்கணா மூவர்க்கும் முதல்வா
    மன்னிய கருணை வாரியே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
    அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
    என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
    திருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 8. நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
    ஞானநா டகம்புரி நலமே
    வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
    பொய்யல உலகறிந் ததுநீ
    இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
    இருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 9. பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
    புண்ணியம் விளைகின்ற புலமே
    மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
    பூங்கழற் கன்புபூண் டவன்காண்
    எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
    இருப்பதுன் திருவருட் கியல்போ.
  • 10. பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
    புண்ணியா கண்ணுதல் கரும்பே
    மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
    வாயில்வாழ் மாசிலா மணியே
    உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
    உன்திரு அடித்துணை அறிய
    என்னைஈன் றவனே முகமறி யார்போல்
    இருப்பதுன் திருவருட் கியல்போ.

அருளியல் வினாவல் // அருளியல் வினாவல்

No audios found!