Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அடிமைத் திறத் தலைசல்
aṭimait tiṟat talaisal
நாள் அவத்து அலைசல்
nāḷ avattu alaisal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
041. அவத்தொழிற் கலைசல்
avattoḻiṟ kalaisal
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்
கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.
2.
தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
3.
ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
4.
மணித்தலை நாகம் அனையவெங் கொடியார் வஞ்சக விழியினால்மயங்கிப்
பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும்பேதையேற்குன்னருள் உளதோ
கணித்தலை அறியாப் பேர்ஒளிக்குன்றே கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும்பொருளே.
5.
ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
6.
துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
7.
பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.
8.
வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண் எனத் தாழேன்
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.
9.
ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன்அருள் செயாதிருப் பாயோ
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.
10.
செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
அவத்தொழிற் கலைசல் // அவத்தொழிற் கலைசல்
No audios found!
Oct,12/2014: please check back again.