Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அவல மதிக்கு அலைசல்
avala matikku alaisal
அருள் திறத்து அலைசல்
aruḷ tiṟattu alaisal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
044. ஆனாவாழ்வின் அலைசல்
āṉāvāḻviṉ alaisal
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
2.
ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே உன்அடி உள்கிநின் றேத்தேன்
முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.
3.
அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
4.
பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
5.
அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ.
6.
உண்டுநஞ் சமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக்
கண்டுநெஞ் சுருகிக் கண்கள்நீர் சோரக் கைகுவித் திணையடி இறைஞ்சேன்
வண்டுநின் றலைக்கும் குழல்பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக்
குண்டுநீர் ஞாலத் திடைஅலை கின்றேன்கொடியனேன் அடியனேன் அன்றே.
7.
அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
8.
இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
9.
இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
10.
நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக
வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும்
அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே.
ஆனாவாழ்வின் அலைசல் // ஆனாவாழ்வின் அலைசல்
No audios found!
Oct,12/2014: please check back again.