Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருமுகப் பாசுரம்
tirumukap pāsuram
தெய்வத் தனித் திருமாலை
teyvat taṉit tirumālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
074. சிங்கபுரிக் கந்தர் பதிகம்
siṅkapurik kantar patikam
காப்பு
நேரிசை வெண்பா
திருச்சிற்றம்பலம்
1.
பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
பொய்யகலப் போற்றுவம்இப் போது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2.
சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
3.
உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
4.
பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
5.
பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
6.
தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
7.
வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
8.
மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
9.
முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
10.
விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
11.
மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
* இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது." * 6 - 5 - 1864 - ஆ. பா.
சிங்கபுரிக் கந்தர் பதிகம் // சிங்கபுரிக் கந்தர் பதிகம்
2507-021-2-Singapuri Kandar Pathigam.mp3
Download