Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
வினா உத்தரம்
viṉā uttaram
சல்லாப லகரி
sallāpa lakari
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
110. நற்றாய் கவன்றது
naṟṟāy kavaṉṟatu
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
2.
ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
3.
உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே.
4.
திருஎலாம்அளிக்கும்தெய்வம்என் கின்றாள் திருச்சிற்றம்பலவன்என்கின்றாள்
உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே.
5.
மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே.
6.
கருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்
பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்
ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்
தருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.
7.
மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றேபொற்றொடிபொங்குகின்றாளே.
8.
திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
9.
அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.
நற்றாய் கவன்றது // நற்றாய் கவன்றது
2996-3004-110-2-Natrai Kavandrathu.mp3
Download