திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அக்கச்சி
akkachsi
சின்னம் பிடி
siṉṉam piṭi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

130. ஊதூது சங்கே
ūtūtu saṅkē

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
    கனக சபையான்என்று ஊதூது சங்கே
    பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
    பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
  • 2. தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
    துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
    ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
    ஏம சபையான்என்று ஊதூது சங்கே.
  • 3. பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
    பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
    இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
    என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.
  • 4. அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
    அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
    இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
    இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.
  • 5. என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
    இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
    பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
    பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
  • 6. சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
    சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
    நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
    நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
  • 7. நாத முடியான்என்று ஊதூது சங்கே
    ஞானசபையான்என்று ஊதூது சங்கே
    பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
    பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.
  • 8. தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
    சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
    உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
    உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
  • 9. என்னறி வானான்என்று ஊதூது சங்கே
    எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
    செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
    சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
  • 10. இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
    எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
    திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
    சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
  • 11. கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
    கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
    இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
    எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.
  • 12. எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
    எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
    எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
    எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
  • 13. கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
    கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
    அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
    அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.
  • 14. தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
    தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
    பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
    பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.
  • 15. ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
    அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
    தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
    தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.
  • 16. பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
    புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
    மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
    மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.

ஊதூது சங்கே // ஊதூது சங்கே